டெல்லி: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு மத்திய அரசு நாட்டின் உயர்ந்த அமைப்புகளில் ஒன்றான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி)  தலைவர் பதவியை வழங்கி உள்ளது. மத்தியஅரசுக்கு ஆதரவாக அவர் செய்யப்பட்ட நன்றி விசுவாசத்துக்கு பரிசாக, அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

ஓய்வு பற்ற நீதிபதி அருண் மிஸ்ரா தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி) புதிய தலைவராக பதவியேற்க உள்ளார்.  உயர் அதிகார பரிந்துரைக் குழு அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதாகவும், இதனால் அவர் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராவது உறுதி என்றும் கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி அருண் மிஸ்ரா. இவர் கடந்த ஆண்டு (2020)  செப்டம்பர் 3 ஓய்வு பெற்றார்.

தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி தேர்ந்தெடுப்பது தொடர்பாக,  கடந்த 2019 ஆம் ஆண்டில், பாராளுமன்றம் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 இல் திருத்தம் செய்து, உச்சநீதிமன்ற நீதிபதியோ அல்லது இந்திய தலைமை நீதிபதியோ இந்த பதவிக்கு தகுதி பெறுவார்கள் என மாற்றப்பட்டது. இந்தத் திருத்தத்திற்கு முன்னர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மட்டுமே என்.எச்.ஆர்.சி தலைவர் பதவிக்கு தகுதி பெற்றவராக இருந்தார். இந்த ஷரத்து மோடி அரசால் திருத்தப்பட்டது.

அதுபோல, என்.எச்.ஆர்.சி.யின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரை, எது முந்தையதோ அந்த பதவியில் இருப்பார்கள்  என 1993 ஆம் ஆண்டின் சட்டம் சொல்கிறது.  இதிலும் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி,  என்.எச்.ஆர்.சி.யின் தலைவர்  பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகள்  அல்லது 70 வயது வரை குறைத்தது, எது முந்தையது. மசோதா தலைவர் மற்றும் உறுப்பினர்களை மீண்டும் நியமிப்பதற்கும் வழங்கும் வகையில் மாற்றப்பட்டது.

இந்த நிலையில், காலியாக  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவி,  யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக,   பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங் களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு வில், அருண்மிஸ்ரா பெயர்  பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் எதிர்க்கட்சி தலைவரன  மல்லிகார்ஜூன் கார்கே மிஸ்ராவின் பெயரை  ஏற்கவில்லை என்று கூறப்படு கிறது. இருந்தாலும் குழுவின் பெரும்பாலோனோர்  ஆதரவு தெரிவித்துள்ளதால், அருண்மிஸ்ரா தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவிக்கு அமர்த்தப்படுவது உறுதியாகி உள்ளது.

நீதிபதி அருண்மிஸ்ரா, உச்சநீதமன்ற நீதிபதியாக இருந்தபோது,  பிரதமர் நரேந்திர மோடியை ஒரு பொது மன்றத்தில் “சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட தொலைநோக்கு பார்வையாளர்” என்று வர்ணித்தார். மேலும், மோடி ஒரு  “பல்துறை மேதை”  என்றும், உலகளவில் சிந்திக்கவும் உள்நாட்டில் செயல்படவும் திறமையான ஒரு தலைவர் என புகழாரம் சூட்டியிருந்தார்.  நீதிபதி ஒருவரே பொதுவெளியில் பிரதமரை பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுபோல, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தபோது,  கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெறுவதற்கு முன்னர்  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குறித்து, தரக்குறைவாக விமர்சித்ததும் சர்ச்சையானது. இதற்காக அவர்மீது   பல மூத்த வக்கீல்கள் மற்றும் செய்தித்தாள் தலையங்கம் தீட்டி, கண்டித்தது குறிப்பிடத்தக்கது.