காஷ்மீர் விஷயத்தில் வரும் நாட்களில் நடக்கப்போகும் விளைவுகளைக் கையாள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க வேண்டுமென கூறியுள்ளார் முன்னாள் ‘ரா’ தலைவர் ஏஎஸ் துலாத், ஒரு பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சி செய்யத் தவறிய விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

காரவன் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் காஷ்மீர் தொடர்பான கடந்தகால மற்றும் நிகழ்கால நிகழ்வுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “தற்போது காஷ்மீரில் நடப்பவை அவசியமான நிகழ்வுகள் என்று நான் கருதவில்லை. இந்த அரிப்பு ஏற்கனவே காஷ்மீரில் நிகழ்ந்து வந்ததாயும், தாங்கள் அதை முடித்து வைத்திருப்பதாயும் நாடாளுமன்றத்தில் அமித்ஷா தெரிவித்ததாக நான் கேள்விப்பட்டேன். ஆம். அந்த வகையில் அவர் சொன்னது சரிதான்.

நான் பலமுறை கூறியிருக்கிறேன். சட்டப்பிரிவு 370 என்பது வலுவற்றது என்று. அது வெறும் ஒரு அத்தி இலை போன்றது. எனவே, அதை எதற்காக மெனக்கெட்டு நீக்க வேண்டும்? காஷ்மீரிகளின் முகத்தை எதற்காக மீண்டும் தரையில் அழுத்த வேண்டும்?

கடந்த 1947ம் ஆண்டு முதற்கொண்டே, காஷ்மீரை மைய நீரோட்டத்துடன இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இந்திய அரசுகள் கிட்டத்தட்ட பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டன. கடந்த ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரின் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லா, டெல்லியுடன் மோத முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து விட்டிருந்தார்.

காஷ்மீரிகள் தங்களின் தனிநாடு கோரிக்கையை மறந்து, சுயாட்சி குறித்தே பேசிவந்தார்கள். அதுதொடர்பாக அதிகமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனாலும், அவர்களுக்கு தெரிந்தே இருந்தது; தாங்கள் தன்னாட்சியைப் பெற முடியாது என்பது. எனவே, தற்போது இருக்கும் நிலையே போதுமானது என்ற மனநிலைக்கு அவர்கள் கிட்டத்தட்ட வந்துவிட்டார்கள். எனவே, அந்த இருக்கும் நிலையையே எதற்காக கெடுக்க வேண்டும்?

“இன்று நடந்துகொண்டிருப்பவைகளுக்கு காரணமானோர் பின்னாளில் தங்கள் செயலை நினைத்து வருந்துவார்கள். ஆனாலும், நான் நினைப்பது தவறாக இருக்கலாம் என்றே நம்புகிறேன்” என்று மாநிலங்களவையில் பேசினார் ப.சிதம்பரம். கிட்டத்தட்ட அதே எண்ணம்தான் எனக்கும். அரசின் இத்தகைய நடவடிக்கையால் காஷ்மீரில் இனிமேல் வன்முறைகள்தான் அதிகமாகும். காஷ்மீரை நன்கு உணர்ந்தவர்களுக்கு இது தெரியும்.

ஆனால், இந்த மாற்றங்கள் உடனே நிகழ்ந்துவிடாது. வரும் நாட்களில் நிகழலாம். இதை உணர்ந்து செயல்பட வேண்டியது புலனாய்வு அமைப்புகள்தான். காஷ்மீரின் மற்றொரு பிரச்சினை என்னவெனில், அங்கே சமீப ஆண்டுகளாக நல்ல தலைமையே இல்லை. தலைவர்கள் எனப்படுவோர் சுயநலமிகளாகவும், தங்களைப் பற்றி மிகையாக கற்பனை செய்துகொண்டோர்களாகவும் உள்ளனர்.

காஷ்மீரின் தலைவர்களில் ஃபரூக் அப்துல்லாதான் சிறந்த புரிந்துணர்வைக் கொண்டவர் என்று நான் கூறுவேன். அவருக்கு காஷ்மீரையும் தெரியும், டெல்லியையும் தெரியும், பாகிஸ்தானையும் தெரியும், சர்வதேச உறவுகளையும் தெரியும். ஆனால், முஃப்தி குடும்பத்தினருக்கு இத்தகைய புரிதல்கள் இல்லாமல் போனது துரதிருஷ்டமே.

பிரிவு 370 என்பது வலுவற்ற ஒன்று எனினும், அதை நீக்க வேண்டுமென்பது பாரதீய ஜனதாவின் அஜெண்டா. அவர்கள் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வென்றபோதே இது நடக்கும் என்பது தெரிந்ததே. இந்த இடத்தில்தான் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைப் பற்றி பேச வேண்டியுள்ளது. அவர்களின் ஒற்றுமை எங்கே போனது? மேற்குவங்கத்தில் அவ்வளவு பெரிய பேரணியை நிகழ்த்திக் காட்டினாரே மம்தா பானர்ஜி. அது ஏன் தொடரவில்லை?

பாரதீய ஜனதாவின் அஜெண்டா குறித்து நாம் அலட்சியப்படுத்தினோம். ஆனால், அதில் அவர்கள் அக்கறையுடனும் விரைவாகவும் செயல்பட்டுள்ளார்கள். சமீப நாட்களில் காஷ்மீரில் நிலைமை மோசமாகி வந்ததை என்னால் உணர முடிந்தது. காஷ்மீரை கூர்ந்து கவனித்தவர்களுக்கும் அது தெரிந்திருக்கும். எதையோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்பதை உணர்ந்தேன். ஆனால், தலைமை எங்கே இருந்தது?

மக்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்கு வழிகாட்டவும் யாருமில்லையே! ‘நாமெல்லாம் ஒன்றுதான், கவலை வேண்டாம், நாம் கடைசிவரை ஒன்றாக இருப்போம்’ என்று சொல்வதற்கு யாருமில்லையே! வரும் ஆபத்தை ஏன் அங்குள்ள அரசியல்வாதிகளால் உணர முடியவில்லை?

அங்கு உடனடியாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை. பொதுவாக ஒவ்வொரு காஷ்மீரியும் தன் மீது அழுத்தம் அதிகரிக்கையில், அமைதியாக இருந்துவிடுவான். பின்னர் அவன் மீண்டு எழும்போது விட்டுக்கொடுக்காத பெரிய போராட்டத்தை நிகழ்த்துவான். இதுதான் காஷ்மீரின் வரலாறாக இருந்துள்ளது.

தற்போது காஷ்மீர் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வலிமையானவர்களின் செயல். அவர்கள் பாகிஸ்தானிடமிருந்து ஆபத்து உள்ளது என்கிறார்கள். புலனாய்வு அமைப்புகள் அப்படியான தகவல்களை அளித்திருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியாது.

இது, பயத்தை உண்டாக்குவதற்காக சொல்லப்படும் பொய்யா? என்பது குறித்தெல்லாம் என்னால் கருத்துக்கூற முடியாது. காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆதரித்திருப்பது அவருக்கு சரியாக இருக்கலாம். கடவுள் அவருக்கு அருள்புரியட்டும்.

நாம் அனைவருமே காஷ்மீரின் பின்னாளைய நிகழ்வுகள் தொடர்பாக பேச முடியும். ஆனால், அதைக்குறித்து தெளிவான விவரணங்கள் தரப்பட வேண்டும். ஏனெனில், தற்போது அனைத்தும் டெல்லியின் பொறுப்பில் இருக்கின்றன. கவர்னர் ஆட்சியோ அல்லது ஜனாதிபதி ஆட்சியோ, அது மத்திய அரசின் ஆட்சிதான். மத்திய அரசின் ஆட்சியில் மாநிலத்தில் ஏதேனும் முன்னேற்றமோ அல்லது நல்ல நிகழ்வுகளோ நடைபெற்றதாய் நாம் கண்டிருக்கிறோமா?

அப்படி, ஒருவேளை காஷ்மீரில் நல்லது நடந்தால் மகிழ்ச்சிதான். ஒருமுறை ஒருபகுதி யூனியன் பிரதேசமாகிவிட்டால், பின்னர் பழைய நிலைக்கு திரும்புவதெல்லாம் நடக்காத காரியம்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அதிகம் பேசாதவர்தான். ஆனால் புத்திசாலி! ஜனநாயக செயல்பாடுகளை புதுப்பிக்காமல் காஷ்மீரில் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவருக்குப் பின்னர் வந்த வாஜ்பாயின் செயல்திட்டமும் அத்தகையதே.

மோடியின் நடவடிக்கைகள் காஷ்மீர் நிலவரத்தை முன்னேற்ற நிலைக்கு தள்ளுகிறதா? அல்லது மோசமான நிலைக்கு உந்துமா? என்பதை காலமும் வரலாறும்தான் சொல்லும். வாஜ்பாயைப் பொறுத்தவரை, கார்கில் போர், விமானக் கடத்தல் மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டு அவற்றை அமைதியாகவும், அதேசமயம் உறுதியாகவும் எதிர்கொண்டார்.

மன்மோகன்சிங்கைப் பொறுத்தவரை, மும்பை தாக்குதல் என்னும் நெருக்கடியை எதிர்கொண்டார். அதுவும் முதிர்ச்சிகரமாக கையாளப்பட்டது. ஆனால், மோடிக்கு நேர்ந்த ஒரு நெருக்கடி(புலவாமா) அவருக்கு பெரிய நன்மையை(தேர்தலில்) அளிப்பதாக அமைந்துவிட்டது.

நான் வாஜ்பாயின் காலத்தில் பணியாற்றியபோது, 370வது பிரிவை நீக்குவது தொடர்பான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஒருவேளை இத்தகைய விஷயங்கள் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலோ அல்லது கட்சிக்குள்ளோ பேசப்பட்டிருக்கலாம். ஆனால், அரசு என்ற நிலையில் அப்படி எதுவுமே கிடையாது. இதுதொடர்பாக வாஜ்பாயின் முதன்மைச் செயலராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ராவும்கூட எதையும் கூறி நான் கேள்விப்பட்டதில்லை.

கடந்த தேர்தலின்போது ராகுல் காந்தியும் பிரியங்காவும் காஷ்மீருக்கு சென்றிருந்தால் விளைவுகள் வேறாக இருந்திருக்கும். காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் காஷ்மீரில் அனைத்து இடங்களையும் வென்றிருக்கலாம். தலைமைத்துவ குறைபாடுதான் காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

அங்கே, அப்துல்லாக்களும் முஃப்திக்களும் தங்களின் தனிப்பட்ட நலன்கள் மற்றும் கர்வத்தை மறந்து ஒன்றாக, தங்களின் காஷ்மீருக்காக செயல்பட்டிருந்தால், இன்று அங்கு நிலைமை வேறாக இருந்திருக்கும். பயன்மிகு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழல் இப்போது அங்கு இல்லை.

காஷ்மீரின் எதிர்காலம் எப்படி அமையும் என்பது குறித்து காலம்தான் முடிவு செய்யும். ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஏதேனும் நல்லது நடக்கலாம்!

 

– மதுரை மாயாண்டி