டெல்லி:
உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவருமான மன்மோகன் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10/5/2020) இரவு நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உடடினயாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். அவரது உடல் நிலை தேறி உள்ளதாக நேற்று மருத்துவமனை தெரிவித்தது. மேலும், அவருக்கு கொரோனா தொற்று சோதனையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மன்மோகன் சிங் குணமாகி உள்ளதாகவும், அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என தெரியவந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று சிகிச்சை முடிந்து மன்மோகன் சிங் வீடு திரும்பியுள்ளார்.
87 வயதான மன்மோகன் சிங்குக்கு இதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. அவருக்கு இரண்டு முறை பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.