தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. பி.வரதராஜுலு நாயுடு நினைவுநாள் இன்று

Must read

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. பி.வரதராஜுலு நாயுடு நினைவுநாள் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது.

இந்திய விடுதலைப் போரின் தன்னிகரில்லாத தமிழகத் தலைவராக விளங்கிய வரதராஜுலு மதுரைத் தொழிலாளர் வேலைநிறுத்தம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு, தமிழ்நாடு பத்திரிகை, குலக் கல்வித் திட்ட எதிர்ப்பு ஆகியவற்றோடு நவீன தமிழகத்தின் கருத்துலகில் பல முற்போக்குச் செல்நெறிகளை முன்னெடுத்தவர்.அரசியல்வாதி, விடுதலை போராட்ட வீரர்

சேலத்தை  சேர்ந்தவரான வரதராஜுலு நாயுடு 1887ம் ஆண்டு பெருமாள் நாயுடு, கும்பம்மாள் தம்பதியினருக்கு  மகனாக பிறந்தார். சுமார் 70 ஆண்டுகள் வாழ்ந்தவர்,  23-07-1957 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார். அன்று அவரது நினைவு தினம்.

வாழ்க்கை வரலாறு

பெ. வரதராஜுலு நாயுடு இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். சித்த ஆயுர்வேத மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

பிறப்பு:

தமிழ்நாடு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் 1887 ஆம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வரதராஜுலு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள். 24ம் வயதில் அவர் ருக்மணி என்பவரைத் திருமணம் செய்த கொண்டார்.

உயர்நிலைக் கல்வி கற்கும் பொழுதே நாடெங்கும் பரவிய வந்தே மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. ‘முற்போக்காளர் சங்கம்’ எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார். அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். அவர் சித்தவைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில் பெரும் புகழ்பெற்றதால் அமைந்தது.

அரசியல்:

1906 ஆம் ஆண்டில் 19 வயதில் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1916 இல் தேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றார். 1918ல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக முதல் சிறைவாசம் விதிக்கப்பட்டது. சொற்பொழி வில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணையில், நாயுடுவின் சார்பில் சி. இராஜகோபாலாச்சாரி வாதாடினார். உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் இராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்கவாதத்தால், நாயுடு விடுதலை பெற்றார்.

அவர் சேலத்தில் வாரப்பதிப்பாக 1919ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த ‘தமிழ்நாடு’ இதழும் அவர் எழுதிய இரு கட்டுரைகள், அரசுத் துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் முறை சிறைவாசத்தை ஏற்றார்.

1923ல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இது அவரின் மூன்றாவது  சிறைத் தண்டனையாகும்.

1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்தபொழுது, வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். 1921 இல் மீண்டும் சேலம் வந்த பொழுது இவரது வீட்டில் தங்கினார். காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி, தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியடிகளிடம் கொடுத்துவிட்டார்.

1922 ல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்ட பொழுது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக் குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு தான் வரி கட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.

வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம், காந்தியடிகளின் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தது.

1925ல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார். 1929ல் காங்கிரசோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்னர் ஆரிய சமாஜத்தில் இணைந்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, அதனை முறியடிப்பதற்கென்று வரதராஜுலு பிரசாரம் செய்தார். ஜி. சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு வி. க.வைத் தொடர்ந்து, தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் நாயுடு.

இதழியல் பணி:

இவரது இதழியல் பணி ‘பிரபஞ்ச மித்திரன்’ எனும் வார இதழ் மூலம் தொடங்கியது. மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும், சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட ‘பிரபஞ்சமித்திரன்’ மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்த பொழுது, நாயுடு 1916 இல் அந்த இதழை வாங்கினார். அவர் ஆசிரியரானார். இரண்டாண்டுகள் வெளிவந்தது. 1918 ஆம் ஆண்டு நாயுடு சிறைப்பட்டபொழுது, ஆயிரம் ரூபாய் ஈடுகாணம் அரசால் கேட்கப்பட்டு, பத்திரிகை முடக்கப்பட்டது.

பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு ‘தமிழ்நாடு’ இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து பணிஆற்றிய நாயுடுவின் பணி ஒரு வரலாற்றுச் சாதனையாகும். 1925 ல் தமிழ்நாடு வார செய்தி பத்திரிக்கையை துவக்கினார். 1931 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலப் பத்திரிகையின் சென்னைப் பதிப்பை துவக்கினார். பிற்காலத்தில் நிதி நெருக்கடியால் அந்தப் பத்திரிகை விற்பனை செய்யப்பட்டது.

1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும், சட்டமறுப்பு இயக்கம் முதலிய வற்றையும் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும், தமிழ்நாடு இதழின் நலிவிற்கும் காரணமாயிற்று. விடுதலை பெற்ற இந்தியாவில் நாயுடு 1951இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1952இல் நடை பெற்ற பொதுத் தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.

‘தென்னாட்டுத் திலகராக’ புகழ் பூத்த வ.உ.சி, 1934இல் ‘தேசிய சங்க நாதம்’ எனும் தலைப்பில் 32 பக்கங்களில் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

அன்னி பெசண்ட், இராஜாஜி, பெரியார், காந்தி, திரு.வி.க., எஸ். சீனிவாச ஐயங்கார், சி.ஆர். தாஸ், சாவர்கர், டாக்டர் மூஞ்சே, மீர்சா இஸ்மாயில், கே.எம். பணிக்கர் முதலியவர் களோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர்.

விடுதலைப் போராட்டத்தில் பன்முறை சிறை சென்ற தியாகி. விடுதலை அடைந்த இந்தியாவில் சட்டமன்ற, மேலவை உறுப்பினர், தொழிலாளர் நலனில் அக்கறை காட்டிய தொழிற்சங்கவாதி, பார்ப்பனரல்லாதார் நலனுக்கு உழைத்தவர். இன்றைய தமிழகக் காங்கிரசைப் பிற்படுத்தப் பட்டவர்கள் புழங்குமிட மாக மாற்றியதில் வரதராஜுலுவுக்குப் பெரும் பங்குண்டு.

More articles

Latest article