ராமேஷ்வரம்: மக்களின் குடியரசு தலைவராக இருந்தவர் கலாம் என்றும், கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மாமனிதர் என்றும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் குறித்த நூலை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்கு சாவடி முகவர்களை நியமித்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தென் மாவட்டங்களில் தமிழகத்தில் கால் பதிக்க முடியாத பாஜகவால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக பாஜக மாநில தலைவர் தலைமையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக என் மண் என் மக்கள்’ என்கிற பெயரில் ஊழலுக்கு எதிராக நடை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்கும் வகையில் 2 நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (28ந்தேதி) தமிழ்நாடு வருகை தந்திருந்தார். நேற்று மாலை ராமேஷ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர், அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, இன்று காலை ராமேஷ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் பின்னர், காலை 10.30 மணியளவில் கட்சி நிர்வாகி வீட்டிற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். பின்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் குறித்த புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் குறித்த ‘Dr. APJ Abdulkalam Memories never Die’ என்ற நூல் வெளியீடு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நூலை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித்ஷா, கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மாமனிதர் அப்துல் கலாம், மக்களின் குடியரசு தலைவராக இருந்தவர் கலாம் என்றும் புகழாரம் சூட்டினார்,.
இதனையடுத்து, ராமேஸ்வரத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்தார். அதைத் தொடர்ந்து 12.40 மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்துக்குச் சென்ற உள்துறை அமைச்சர், பிற்பகல் 1.20 மணிக்கு மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு சென்ற பிறகு 2.15 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லிக்குக் கிளம்புகிறார்.