பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் இன்று மரணமடைந்தார் அவருக்கு வயது 79.

1999 ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் தலைமையிலான ஆட்சியை ராணுத்தின் உதவியுடன் தூக்கியெறிந்து அதிபராக பொறுப்பேற்றவர் பர்வேஸ் முஷாரப்.

ராணுவ தலைமை தளபதியாக இருந்த இவர் காஷ்மீருக்குள் படையெடுக்க முயற்சித்ததாக நவாஸ் ஷெரிப் அரசு குற்றம்சாட்டியதை அடுத்து அவரது ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் தூக்கியெறிந்தவர் பர்வேஸ் முஷாரப்.

2008 ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட பர்வேஸ் முஷாரப் தேர்தலில் தோல்வியடைந்து லண்டனில் தஞ்சமடைந்தார்.

பின்னர் 2013 ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ காரணங்களுக்காக 2016 ம் ஆண்டு துபாய் செல்ல அனுமதிக்கப்பட்ட பர்வேஸ் முஷாரப் பல ஆண்டுகளாக துபாயில் தங்கி இருந்தார்.

தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த பர்வேஸ் முஷாரப் இன்று மரணமடைந்தார்.

1943 ம் ஆண்டு ஒன்றுபட்ட இந்தியாவின் பழைய டெல்லி-யில் பிறந்த பர்வேஸ் முஷாரப் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் சென்று குறியேறினார்.

18 வயதில் ராணுவத்தில் சேர்ந்த பர்வேஸ் முஷாரப் ராணுவத்தின் உயர்பொறுப்பை வகித்ததோடு அந்நாட்டு அதிபராகவும் சர்வாதிகாரம் செய்துவந்த நிலையில் துபாயில் தனது 79 வயதில் மரணமடைந்தார்.