தூத்துக்குடி: ரூ.1 கோடி மதிப்புடைய முந்திரி பருப்பு ஏற்றி வந்த லாரியை கடத்திய முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர் சி.த.செல்லப்பாண்டியன். இவரது 2-வது மகன் ஜெபசிங். இவர் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரிப் பருப்புககளை ஏற்றி வந்த லாரியை கடத்தி சென்ற நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
“குமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு 12 டன் எடை கொண்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்புகள் ஏற்றி வந்த லாரியை ஹரி என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தூத்துக்குடி அருகே புதுக்கோட்டைப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த ஒரு கும்பல், லாரியை மடக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றுவிட்டது. போகும்வழியில், லாரி டிரைவர் ஹரியை தள்ளிவிட்டு, லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் உடைத்து எறிந்துவிட்டு லாரியை கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் உடனே தனது நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்ததுடன், புதுக்கோட்டை காவல்துறையிலும் புகார் பதிவு செய்தார். இதையடுத்து, காவல்துறையினர் உஷாராகி, தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது, கடத்தப்பட்ட லாரி நாமக்கல் நோக்கிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார், அந்த லாரியை பின்தொடர்ந்து சென்றனர். இதை தெரிந்துகொண்ட லாரியை கடத்தி யகும்பல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மேட்டுக்காடு என்ற பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நாமக்கல் எல்லை திம்மநாயக்கன்பட்டியில் சந்தேகத்திற்கிடமான நின்றுகொண்டிருந்த ஒரு காரை மடக்கி, அதில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் மற்றும் இன்னொருவரையும் விசாரித்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்விசாரணையில் லாரியைக் கடத்தியது செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் தலைமையிலான கும்பல்தான் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கும்பலை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மீட்கப்பட்ட லாரி ஆகியவற்றை கைப்பறிய போலீசாரி, அதை தூத்துக்குடிக்கு எடுத்து வருகின்றனர். இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.