விழுப்புரம்

நேற்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளன.  வேட்பு மனுத் தாக்கல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்து வருகின்றன.

அவ்வகையில் விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்கிய ராஜை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், பாஜகவில் உள்ள அனைவரும் என்ன உத்தம காந்தியா?  அனைவரும் ஊழல் வாதிகளே எனவும் தமிழகத்தில் 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதே அதிமுக போட்ட பிச்சை தான் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.