விருதுநகர்: அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில், அவரது சகோதரி மகன்கள் மற்றும் கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்துவிட்ட சிலர் கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட சிலர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். இதையறிந்த ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதையடுத்து,  ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 43 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,  அவரின்  சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.