திருச்சி:
தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று திருச்சிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த ஆளுநர் பன்வாரிலாலுக்கு, முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று திருச்சி வந்துள்ள ஆளுநர், இன்று மாலை மாவட்ட ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிக உள்பட பொதுமக்களை யும் சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். மேலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்பட பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆளுநரின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, திருச்சி வரும் ஆளுநருக்கு திருச்சி மாவட்ட திமுக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற ஆளுநருக்கு எதிராக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுகவினர் சாலையின் இருபுறங்களில் ருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சேரு, “ஆளுநரின் ஆய்வுப் பணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அவமதிப்பது போல் உள்ளது. இன்றைக்கு உள்ள ஆட்சியாளர்கள் தங்களின் பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆளுநரின் ஆய்வு தவறில்லை என்று கூறுகின்றனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ஆளுநரை ஆய்வு செய்ய விட்டிருப்பாரா” என்றும் கேள்வி எழுப்பினார்.