திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது – பந்திக்கு முந்திய ஓபிஎஸ்! ஜெயக்குமார் காட்டம்

Must read

சென்னை: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று காட்டமாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பந்திக்கு முந்திய ஓபிஎஸ் என்றும், ஓ.பி.எஸ். தரப்பில்  80 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் காட்டமாக விமர்சித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய உயர்வு வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை முடிக்காததை கண்டித்தும், ஊழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.  அப்போது, அவர் பேசியதாவது,

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களாக உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த ஆட்சியின் அவல நிலையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். இந்த ஆட்சியில் எல்லா தொழிலாளர்களுமே நலிவடைந்து போய் இருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.  முதல்-அமைச்சருக்கு தினமும் ‘போட்டோ ஷூட்’ மட்டும் தான் முக்கியம். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தான் இந்த அரசு திறந்து வைக்கிறது.  நகைக்கடன் தள்ளுபடியில் அத்தனை பேருக்கும் தள்ளுபடி செய்யவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 தருவேன் என்றார்கள் கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். செய்தார்களா? அதன் சூட்சுமம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும். எல்லா துறையிலும் தோற்றுப்போன இந்த அரசு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க கூடாது. தொழிலாளர்கள் நினைத்தால் இந்த ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவார்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர், இன்று திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியதுடன்,  எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறதே தவிர காவல்துறை தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை என்றார். மத்திய அரசுக்கு இணங்கி செல்வதைத்தான் ஆளும் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது என்ற அவர், எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் கப்பன் சாஸ்திரம் போன்று செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் 80 சதவீத அ.தி.மு.க.வினர் இல்லை. 80 பேர் மட்டுமே உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் முடிந்தால் 1000 பேரை திரட்டி போராட்டம் நடத்தி காட்டட்டும். அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரனை எந்த நிலையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.

கவர்னரின் டீ பார்ட்டியில் ஒபிஎஸ் கலந்துகொண்டது குறித்த கேள்விக்கு,  சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் அளித்த தேனீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. பன்னீர் தரப்பை போல நாங்கள் பந்திக்கு முந்திக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு கூறினார்.

More articles

Latest article