மும்பை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிரா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்தார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில், தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் ஐக்கியமானார். அவருடன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்சி அமர் ராஜூர்கரும் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து திங்கள்கிழமை (பிப்ரவரி 12ந்தேதி) திடீரென விலகிய மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவான் 48 மணி நேரத்தில் தனது அடுத்தக்கட்ட நகர்வை அறிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவர் இன்று முப்பையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று, பாஜக மாநில தலைவர் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். அசோக் சவான் பாஜகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர் மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர்.
ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர். இந்த நிலையில் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகியதோடு, பாஜகவிலும் இணைவது சிக்கலை ஏற்படுத்துகிறது.
இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகுவது, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.