கொல்கத்தா:

சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கில்,.கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உயர்நீதி மன்றம்  முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

மேற்குவங்கத்தை தலைமையகமாகக் கொண்ட, சாரதா நிதி நிறுவனத்தின் 10 ஆயிரம் கோடி மோசடி குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த மோசடியில், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்கி உள்ளனர்.

இந்த மோசடி வழக்கை தொடக்கத்தில் கொல்கத்தா  மாநில காவல்துறை தலைவர் ராஜீவ்குமார் தலைமையிலான டீம் விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணை தொடர்பான சான்றுகளை சிபிஐ வசம் ஒப்படைக்க ராஜீவ்குமார் மறுத்து விட்டார்.

இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஐ தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், முக்கியமான ஆதாரங்கள் அடங்கிய மடிக்கணினிகள், செல்பேசிகள் ஆகியவற்றை விசாரணை அதிகாரி, முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் திருப்பி கொடுத்து விட்டதாகவும், சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியது, வழக்கை சிபிஐக்கு மாற்றுமுன் சான்றுகளை அழிக்க முயன்றது  விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.

அதையடுத்து, .  விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ்குமார் ஆஜராகவில்லை. அவரை சிபிஐ அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்,  ராஜீவ்குமார் தரப்பில்,  கொல்கத்தா உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

ராஜீவ்குமார் கொல்கத்தாவை விட்டு வெளியேறக்கூடாது என்றும்,  ராஜீவ்குமாரை  சிபிஐ கைது செய்தால்  தலா 50 ஆயிரம் ரூபாய் என 2 பிணைத் தொகை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், ராஜீவ்குமாரை விசாரணைக்கு வரவழைப்பதாக இருந்தால், 48 மணி நேரத்திற்கு முன்பாகவே சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் சிபிஐக்கு உத்தரவிட்டு உள்ளது.