பாஜக பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதாகக் கூறி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் இருந்து 2.5 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பிலிம் நகர் காவல் நிலையத்தில் முன்னாள் நீதிபதி அளித்துள்ள புகாரில், “ஹைதராபாத்தைச் சேர்ந்த சரத் ரெட்டி மற்றும் நரேந்திரா என்ற இரண்டு நபர்கள் எனது மருமகன் மூலம் எனக்கு பரிச்சயமானார்கள்.”

“உலக இந்து காங்கிரசுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்ட சரத் ரெட்டி, தாங்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்றும் கூறினர்.

இவர்களின் வார்த்தைகளை நம்பி அமெரிக்காவில் உயர்கல்வி முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் எனது பேரக்குழந்தைகளுக்கு வேலை வாங்கித் தர கேட்டிருந்தேன்.

அதற்கு பாஜக கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார்கள்.

இதை நம்பி கடந்த 2021ம் ஆண்டு எனது மனைவி மற்றும் மகள்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணமாக எடுத்து பல தவணைகளில் இவர்களுக்கு ரூ. 2.5 கோடி கொடுக்கப்பட்டது.

ஆனால், பணத்தை வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல், அவர்கள் கூறிய தேர்தல் பத்திரத்தையும் கண்ணில் காட்டாமல் அலையவிட்டனர்.

இதனால், காவல்துறையினர் தலையிட்டு இந்த நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என்று புகாரளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அந்த முன்னாள் நீதிபதி, “தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில் அதற்கான பணத்தை உரியவர்களிடம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறிய அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பெயரைச் சொல்லி ரூ. 2.5 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பணம் கொடுத்ததற்கான வாட்ஸப் தகவல் உள்ளிட்ட ஆதாரங்களை காவல்துறையினரிடம் அளித்துள்ளதாக” கூறியுள்ளார்.

ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தவிர வேறு உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றிய இவர் தனது பெயரை வெளியிடவேண்டாம் என்று அந்த ஊடகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது 74 வயதாகும் அந்த முன்னாள் நீதிபதியிடம் இருந்து பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 406 (நம்பிக்கை மோசடி) 420 (ஏமாற்றுதல்) பிரிவு 34 (ஒரே நோக்கத்திற்காக பல நபர்களால் செய்யப்பட்ட குற்ற செயல்கள்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.