முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம் பெற்றிருப்பதால், அவரும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
அதேபோல, ஏர்செல் – மேக்சிஸ் வழக்கையும் கருத்தில்கொண்டு, இரண்டு வழக்கிலும் தன்னைக் கைது செய்யக் கூடாது என்று டெல்லி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம். ஒவ்வொரு முறையும் இந்த வழக்கில் கைது செய்வதற்கான தடையை நீட்டித்துக் கொண்டேவந்தார் அவர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் ப.சிதம்பரம். அவரது முன்ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக, இரு அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டன.
அதைத் தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் தாக்கல் செய்தார். முன்ஜாமீன் மனுவை நீதிபதி சுனில் கவுர் தள்ளுபடி செய்தார். வழக்கின் தீவிரத்தன்மை சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் ரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. முன்ஜாமீன் கிடைக்காததால் சிதம்பரம் எந்தநேரமும் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் பரவியது.
இதனை தொடர்ந்து சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், சிதம்பரம் ஆஜராகாததால் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்துக்குச் சென்றனர், ஆனால், அவர் அங்கு இல்லாத காரணத்தால் திரும்பிவிட்டனர். அதன் பின்னர் ஈ-மெயிலிலும், சம்மன் அனுப்பினர். அதன் பின்னர் 2வது முறையாக சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு வழங்க வந்த நோட்டீஸை அவரது வீட்டில் ஒட்டிவிட்டுச் சென்றனர்.
இன்று காலையிலும் இருமுறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு வந்தனர், ஆனால், அவர் அங்கு இல்லாத காரணத்தால் திரும்பினர்.
இத்தகைய சூழலில் மாலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், தான் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக கூறி, வெள்ளிக்கிழமை வரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை காத்திருக்குமாறு கோரியிருந்தார். செய்தியாளர் சந்திப்பு முடிவுற்ற பின்பு அவர் வீட்டுக்கு சென்ற நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது வீட்டுக்குள் செல்ல முற்பட்டனர். ஆனால் வீட்டு காவலாளி அவர்களை அனுமதிக்க மறுத்ததால், சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற அதிகாரிகள், சுமார் 1 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சிதம்பரத்தை கைது செய்தனர்.
சிதம்பரத்தை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், காரில் அவரை தங்களது தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை சிதம்பரத்தின் முன் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை மேற்கொள்ள உள்ள நிலையில், சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]