டில்லி

முன்னாள் தேர்தல் ஆணையர் டி என் சேஷன் தற்போதைய தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன் தொலைபேசியில் பேச முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு  வந்துள்ளன.ஆனால் தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தேர்தல் நன்னடத்தை மீறல் புகாரில் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன.

நேற்று முன் தினம் உச்சநீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையம் தங்களுக்கு அரசியல்வாதிகளுக்கு எதிராக நடக்கவும் அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பவும் அதிகாரமில்லாத நிலையில் உள்ளதாக தெரிவித்தது. ஆனால் அதே தினத்தன்று யோகி ஆதித்யநாத், மாயவதி, அசாம்கான் மற்றும் மேனகா காந்தி ஆகியோருக்கு தேர்தல் பிரசரம் செய்ய இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் அனுப்பியது.

அடுத்த நாள் சாதி குறித்த கட்சி பிரமுகர்களின் அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பதியப்பட்ட மனு மீது விசாரணை நடந்தது. அப்போது தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திடம் தனக்கு சாதி குறித்து அறிக்கைகள் அளிக்கும் கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தது.

இவ்வாறு முரண்பாடான தகவல்களை அளிப்பதால் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

கடந்த 1990 முதல் 1996 வரை தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர் டி என் சேஷன். இவர் தனது பதவிக்காலத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரம் குறித்தும் அவர் பதவி ஏற்ற பிறகே பலருக்கு தெரிய வந்தது.

டி என் சேஷன் இன்று காலை தற்போதைய தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன் தொலைபேசி தொடர்பு கொள்ள முயன்றதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது சுனில் அரோரா வேலைப்பணியில் உள்ளதால் பேச முடியவில்லை எனவும் மீண்டும் அழைப்பதாக சேஷனிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்தின் பணிகள் குறித்து கடும் விமர்சனம் எழுந்து வரும் வேளையில் முன்னாள் தேர்தல் ஆணையர் டி என் சேஷன் தற்போதைய தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன் பேச விரும்பியது பல ஊகங்களை கிளப்பி உள்ளது.