சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரும் (ஜூன்) 17ம் தேதி தலைநகர் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்திக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் முதல்வர் பிரதமருடன் பேசப்போவது என்ன? வேறு யாரையெல்லாம் சந்திக்க இருக்கிறார் என்பது போன்ற பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சந்திப்பின்போது, நீட் விவகாரம், ஹைட்ரோகார்பன் உள்பட, புதிய கல்விக்கொள்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழகஅரசின் நிலைப்பாட்டை மத்தியஅரசிடம் முதல்வர் எடுத்துக்கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகஅரசு சார்பில் டெல்லி பிரதிநிதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
திமுக விவசாய அணியின் செயலாளராக இருந்து வரும் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயனை தமிழகஅரசின் டெல்லி பிரதிநிதியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இவரது பதவிக்காலம் ஓராண்டு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.