முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெர்னாண்டஸ் டெல்லியில் காலமானார்.
1930ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1977ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மொத்தம் 9 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 1990ம் ஆண்டு விபி சிங் தலைமையிலான அரசில் ரயில்வேத்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இறுதியாக 2009 ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை மாதம் வரை பீகார் மாநிலங்களவை உறுப்பினராகவும் பெர்னாண்டஸ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பெர்னாண்டஸ் இருந்து வந்தார். இவரின் பதவிக்காலத்தில் தான் கார்கில் போர் நடந்தது. போக்ரான் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக பெர்னாண்டஸ் ஆதரித்தும் வந்தார். மேலும், தனி ஈழம் அமைய பெர்னாண்டஸ் குரல் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் சிகிச்சைப்பெற்று வந்த பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார். மறைந்த முன்னாள் அமைச்சருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.