சேலம்: ராசிபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.சுந்தரம் உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் காலமானாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம்.  இவர் ஜெ. மறைவுக்கு பிறகு, அதிமுக தலைமைமீது அதிருப்தியில் இருந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அதிமுகவில்  இருந்து விலகி,  2021ம் ஆண்டு ஜூலை 11  தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார்.

நாமக்கல் மாவட்ட அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகியாக இருந்த  பி.ஆர்.சுந்தரமும் கடந்த 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தபோது, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நான்கு  எம்எல்ஏக்களில்  இவரும் ஒருவர். அதேபோல், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு, 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநில அளவில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களில் பி.ஆர்.சுந்தரம் முதல் இடத்தில் இருந்தார்.

ஆனால்,  2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவு காரணமாக, கட்சித் தலைமையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைக்கு மாறியது. அப்போது பி.ஆர்.சுந்தரம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். அதனால்,  அவருக்கு 2-வது முறையாக எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட ஊராட்சிக்குழு பதவிக்கு போட்டியிட்டு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக  இருந்தார். பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரினார். ஆனால், எடப்பாடி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்த நிலையில், அவர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.