திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இதில் கலந்துகொண்டு திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை பிப். 25ம் தேதி இரவு அதேபகுதியைச் சேர்ந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த நபர்கள் கடுமையான ஆயுதங்களால் தாக்கியதாக தினேஷ்குமார் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த தினேஷ்குமார் மற்றும் தடுக்க வந்த மகேஷ் ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதிமுக அறிவித்திருந்த இந்த போராடட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் தடையை மீறி திருக்கழுக்குன்றத்தில் இன்று போராட்டம் நடத்த முயற்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கைது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.