சென்னை:
இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருளைத் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
![](https://patrikai.com/wp-content/uploads/2021/11/18675546041637394788159667112NOV-20-B-DNA-cm-ed-2.jpg)
இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா. விசுவநாதன், தடய அறிவியல் துறை இயக்குநர் மா. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய மென்பொருள் மூலமாக, கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீடு ஆய்வு மூலம் உரியப் பெற்றோருடன் ஒப்படைத்தல், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பைக் கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிதல், இயற்கை பேரிடர்களால் உயிரிழந்த நபர்களைக் கண்டறிதல் போன்ற பணிகளை மிக எளிதாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.