டில்லி
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்க தயாராக உள்ளதாக விமானப் பயணத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 49% பங்குகளை வெளியாருக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளதாக அரசு அறிவித்தது அதையொட்டி பல ஊகங்கள் வெளியாகின. டாடா நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் வாங்க உள்ளதாக வந்த தகவல்கள் பற்றி அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தற்போது விமானப் பயணத்துறை செயலர் சவுத்ரி செய்தியாளர்களிடம், “ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்க மிகவும் ஆர்வத்துடன் உள்ளது. தற்போதுள்ள நிலையில் அது வெளிநாட்டு வர்த்தக நிறுவனமா அல்லது விமான நிறுவனமா என சொல்ல இயலாது. ” எனத் தெரிவித்துள்ளார்.
விமானப் பயணத்துறையின் அதிகாரிகளில் சிலர் அந்த நிறுவனம் டாடா ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது இண்டிகோ மற்றும் கத்தார் ஏர்லைன்ஸ் ஆகியவைகளாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே ஏர் இந்தியா விமான நிறுவனம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 28000 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அத்துடன் கடன் மற்றும் நஷ்டமாக ரூ. 50000 கோடிக்கு மேல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுவதுமாக கணக்கு பார்க்கும் போது ரூ.70000 கோடியை அது தாண்டக் கூடும் என சொல்லப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், “இந்த மோடி அரசு ’மேக் இன் இந்தியா’ எனக் கூறி விட்டு இந்தியாவில் ஏற்கனவே உள்ளதையும் வெளிநாடுகளுக்கு விற்று வருகிறது. அரசால் ஒரு விமான நிறுவனத்தை நடக்க முடியவில்லை என்றால் அதை தேர்ந்தெடுத்ததின் பயன் என்ன?” என கருத்து தெரிவித்துள்ளனர்.