ஒரு கலைப் பிரபலத்தின் கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகமே முன்வந்து பதிலளித்திருப்பது பெரியளவிலான கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
ரிஹானா, 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலம் என்பதால் சில மணி நேரங்களில் அந்த ட்வீட் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பதிவிட்ட 14 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான ரீ-ட்வீட், 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ள அந்த ட்வீட் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது.
ரிஹானாவை பின் தொடர்பவர்கள் பலரும் #RihannaSupportsIndianFarmers என்ற ஹேஷ்டேக்கில் தங்களது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், வலதுசாரிகள் ரிஹானாவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திடீரென விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வேளாண்மை சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன. மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே இதை எதிர்க்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை மனதில்கொண்டு தொடர்ந்து அவர்களுடன் அரசு உரையாடி வருகிறது.
இதுவரை போராட்டம் நடத்தும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் 11 சுற்றுகள் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சட்டங்களை நிறுத்திவைக்கவும் அரசு தயாராக இருப்பதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமரே தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.
ஆனால், சிலர் தவறான உள்நோக்கத்துடன் இந்தப் போராட்டங்களின் மீது தாக்கம் செலுத்தவும், அவர்களை திசைதிருப்பவும் முயல்கின்றனர். கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் தலைநகரில் நடந்த வன்முறை கூட இதன் காரணமாகவே நடந்தது. இந்தப் போராட்டங்களை இந்தியாவின் ஜனநாயக பண்பாகவே உலகம் பார்க்கவேண்டும். அரசும், விவசாயிகளும் நிச்சயம் இதற்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, இந்தப் பிரச்சினைகள் குறித்து புரிந்துகொண்டு சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். பிரபலங்களால் போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துகள் எதுவும் சரியானவை அல்ல” எனத் தெரிவித்துள்ளது.
எப்போதும் இல்லாத விதமாக, ஒரு பிரபலத்தின் ட்விட்டர் பதிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகமே பதிலளித்திருப்பது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.