டோக்கியோ: மியான்மர் நாட்டில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து, ஜப்பானில் போராட்டம் நடைபெற்றது.

கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் மியான்மரில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் கட்சி அபாரமாக வெற்றி பெற்றது. ஆனால் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ராணுவம் கூறி வந்தது.

இதனை தொடர்ந்து பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி மியான்மர் ராணுவம் ஆட்சியை கவிழ்த்தது. தற்போது அந் நாட்டில் ஓராண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் கட்சியின் முக்கிய தலைவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜப்பானில் டோக்கியோவில் மியான்மர் ராணுவ சதித் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரின் ராணுவ ஆட்சியை ஜப்பான் அங்கீகரிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.