டில்லி

லைநகர் டில்லியில் பல வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இளைஞர் காங்கிரஸ் ஆக்சிஜன் உதவி புரிந்துள்ளது.

இளைஞர் காங்கிரஸ்

இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   குறிப்பாக டில்லியில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.  டில்லியில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்களிலும் தூதர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இந்த நிலை கடந்த சனிக்கிழமை அன்று பிலிப்பைன்ஸ் தூதரகம்  இந்திய இளைஞர் காங்கிரஸிடம் சிலிண்டர்கள் உதவி கேட்டதால் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் பல தூதரகங்களுக்கும் பரவியது.  இதில் ஒன்றான நியுஜிலாந்து நாட்டுத் தூதரகம் நேற்று காலை இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என வெளிப்படையாக டிவிட்டரில் உதவி கேட்டது.  இதனால் வெளியுரவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் இடையே இணையத்தில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

தூதரகத்தின் இந்த டிவிட்டர் பதவி உடனடியாக நீக்கப்பட்டது.  ஆயினும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு மணி நேரத்துக்குள் ஆக்சிஜன் சிலிண்டருடன் தூதரகம் சென்று அதை அளித்துள்ளனர்.  நியுஜிலாந்து தூதரகம் இந்த சிலிண்டர்களை பெற்று கொண்டுள்ளது.   இந்த தகவலும் டிவிட்டரில் வெளியாகியது.

இது குறித்து காங்கிரஸ் மாநிலங்காவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் பல தூதரகங்கள் ஆக்சிஜன் தேவையால் தவிக்கும் போது  வெளியு|றவுத் துறை அமைச்சகம் அதைக் கண்டு கொள்ளவில்லை எனவும் பல மணி நேரம் காத்திருந்தும் எவ்வித பலனும் இல்லாததால் தூதரகம் இளைஞர் காங்கிரஸ் உதவியை நாடியதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெய்சங்கர் தூதரகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் இளைஞர் காங்கிரஸ் தாமாகவே வந்து சிலிண்டர்கள் அளித்தாகவும் தெரிவித்தார்.   மேலும் இது விளம்பரம் தேடிக் கொள்ளச் செய்யப்பட்ட ஒரு மலிவான செய்கை எனத் தெரிவித்தார்.  மேலும் பல நோயாளிகள் ஆக்சிஜனுக்காக காத்திருக்கையில் இளைஞர் காங்கிரஸ் தேவை இல்லாமல் அவற்றை அளித்தாகவும் குறிப்பிட்டார்.

இந்த வாக்குவாதம் கடும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.  இது குறித்து ஒரு சில நாடுகளில் தூதரக அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தினர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.  மேலும் தங்களுக்கு இந்திய அரசின் உதவி கிடைக்காத போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் இது போல் ஏற்கனவே உதவி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.