கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றார் ஹர்சினா
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற ஹர்சினா பிரசவத்திற்குப் பின் தன் சொந்த ஊரான அடிவாரம் கிராமத்திற்கு திரும்பினார்.
வீடு திரும்பிய ஒரு சில நாட்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார் ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து அடிக்கடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். கடைசியாக அவரது வயிற்றில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் பயன்படுத்தும் இடுக்கி இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பத்து மாதங்கள் முன்பு அதை அகற்றினர்.
இதனையடுத்து அரசு மருத்துவமனையை அனுகியபோது தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் இது வேறு எங்காவது நடந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
மருத்துவர்களின் அலட்சியத்தாலும் பொறுப்பற்ற பதிலாலும் கோபமடைந்த ஹர்சினா தனக்கு நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.
மே மாதம் முதல் உண்ணாவிரதம் இருந்துவரும் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டு தினமும் தனது உறவினர்களுடன் வந்து மருத்துவமனையை முற்றுகையிட ஆரம்பித்தார்.
இதனையடுத்து காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் அறுவை சிகிச்சையின் போது மறதியாக இடுக்கியை கர்ப்பப்பையில் வைத்து தைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாவட்ட மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு ஹர்சினாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை அதிகாரி, அரசு வழக்கறிஞர், மருத்துவர்கள் அடங்கிய இந்த குழு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் வயிற்றில் இடுக்கி எப்படி வந்தது என்று விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட மருத்துவ குழு தவிர மாநில சுகாதாரத் துறையும் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளதை அடுத்து தனக்கு நிவாரணம் கிடைக்கும் என்று ஹர்சினா உறுதியுடன் உள்ளார்.