டில்லி

பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் கடந்த 23 வருடங்களாக பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வருகிறார்.

வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ரக்‌ஷா பந்தன்.  இந்த தினத்தில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரராக பாவிப்பவர்களுக்கும் ராக்கி கட்டுவது வழக்கம்.  இந்திய பிரதமர் மோடிக்கு இது போல பாகிஸ்தானை சேர்ந்த கோமார் மொய்ன் சாயிக் என்னும் பெண் தொடர்ந்து 23 வருடங்களாக ராக்கி கட்டி வருகிறார்.   பாகிஸ்தானை சேர்ந்த இந்தப் பெண் திருமணத்துக்குப் பிறகு இந்தியாவில் கணவருடன் வசித்து வருகிறார்.

இது பற்றி அந்தப் பெண் கூறியதாவது :

”மோடி ஆர் எஸ் எஸ் இல் இருந்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும்.  கடந்த 23 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் நான் தொடர்ந்து அவருக்கு ராக்கி கட்டி வருகிறேன்.  அவரும் என் மேல் தன் சொந்த சகோதரியைப் போல் அன்பாக உள்ளார்.  தற்போது அவர் பல பணிகளில் ஈடுபட்டுள்ளதால் என்னால் இந்த வருடம் ராக்கி கட்ட முடியாமல் போய்விடுமோ என பயந்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் இரு தினங்களுக்கு முன் அவரே என்னை தொலைபேசியில் அழைத்து ராக்கி கட்ட அழைப்பு விடுத்தார்.  இன்றும் இந்த சகோதரியை அவர் மறக்காமல் இருப்பதை எண்ணி நான் மகிழ்கிறேன்” என்று கூறினார்.