சென்னை:

நாட்டிலேயே முதன்முறையாக,  சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக  வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது. அதில், குணமடைந்த நோயாளிகள்  159 பேர் தங்களது வாக்கினை செலுத்தினர்.

மனநலம் குணமடைந்த 192 பேர் தேர்தலில் வாக்களிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 159 பேர் வாக்களித்து உள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில்  ஏராளமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  அவர்களில், சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய நிலையிலுள்ள 192 பேருக்கு வாக்களிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனை இயக்குநர், பேராசிரியர்கள் அவர்களுக்கு வாக்காளர் அட்டையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளும்  அவர்களுக்கு வாக்களிப்பது குறித்து பயிற்சி அளித்து வந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்திலேயே அவர்கள்  வாக்களிக்கும் வகையில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த நிலையில், அவர்கள் சாதாரண மக்களைப்போல  வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.  159 பேர் வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மனநல சிகிச்சை பெறுபவர்களில், தகுதியானவர்களை தேர்வு செய்து வாக்களிக்க வைத்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகா  தேர்தல் ஆணையதுடன் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.