டில்லி:
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களது புகைப்படமும் இணைக்க அகில இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சில தொகுதிகளில், ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் களமிறங்கும் நிலையில், யாருக்கு வாக்க ளிப்பது என்பது குறித்து வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, வாக்களிக்கும் பலோட் மெஷினில், வேட்பாளர்களின் சின்னத்துடன், வேட்பாளர்களின் புகைப்படமும் இடம்பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளிலும் வேட்பாளர்களின் புகைப்படமும் அச்சிடப்பட்டு இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட தபால் தலை அளவிலான புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது