ரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள்
இந்த ஊரடங்கு நேரத்திலும் கூட வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் வங்கி அதிகாரிகளின் அராஜக போக்கு ஆங்காங்கே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.  அதே போல வெறும் 3 ரூபாய் 46 காசுகள் கடனுக்காக விவசாயி ஒருவரை 15 கி.மீ. நடக்க வைத்த வங்கி அதிகாரிகளின் அடாவடிச்செயல் பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பருவே கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி லஷ்மி நாராயணன். இவர் நித்தூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ 35 ஆயிரம் ரூபாய்க்குக் கடன் பெற்றிருந்தார். இதில், ரூ32 ஆயிரத்தை அரசு தள்ளுபடி செய்தது. மீதமுள்ள 3 ஆயிரம் ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு வங்கியில் செலுத்தியிருந்தார் லஷ்மி நாராயணன். இந்தநிலையில், வங்கியின் அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு, கடன் தொகையில் பாக்கி இருப்பதாகவும், உடனடியாக வங்கிக்கு நேரில் வரவேண்டுமென்றும் அவசரம் காட்டியுள்ளனர்.
என்னவோ ஏதோவென்று பதறிய லஷ்மி நாராயணன், பேருந்து ஏதுமில்லாத சூழலில் வேறு வழியின்றி 15 கி.மீ. நடந்தே அவசர அவசரமாக வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கே வங்கி அதிகாரிகள் கடன் பாக்கித்தொகை 3 ரூபாய் 46 பைசாக்களை உடனே செலுத்த வேண்டுமெனக் கூறியதைக் கேட்டு வெறுத்துப்போய்விட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வங்கியில் இருந்து போன் செய்து உடனே வருமாறு கூறினார்கள். அதனால், பீதியடைந்தேன். ஊரடங்கு காரணமாகப் பேருந்து சேவை எதுவும் இல்லை. என்னிடம் எந்த வாகனமும் இல்லை. ஒரு சைக்கிள் கூட இல்லை. நடந்தே வங்கிக்குச் சென்று சேர்ந்தேன். அங்கு நான் கட்ட வேண்டிய தொகை 3 ரூபாய், 46 பைசாக்கள் என்று வெகு அலட்சியமாகத் தெரிவிக்கின்றனர். வங்கியின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் என்ன மிகவும் காயப்படுத்திவிட்டது” என்கிறார் வருத்தத்துடன்.
இது குறித்து வங்கியின் மேனேஜர் பிங்வா, “தணிக்கை நடந்து கொண்டிருந்தது. அவரது கடன் கணக்கை முடித்தாக வேண்டியிருந்தது. அவர் அந்த பாக்கித்தொகை 3 ரூபாய், 46 பைசாக்களைச் செலுத்த வேண்டியிருந்ததுடன், அதற்கு அவருடைய கையெழுத்தும் தேவைப்பட்டது” என்றார். வங்கியின் இந்த செயலுக்குப் பல தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
– லெட்சுமி பிரியா