டில்லி

னியார் மயமாக உள்ள திருச்சி விமான நிலையத்துடன் சேலம் விமான நிலையமும் இணக்கப்படுகிறது.

மத்திய அரசு விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கி வருகிறது.  அவ்வகையில் கடந்த ஆண்டு அகமதாபாத், மங்களுரு, லக்னோ, கவுகாத்தி, மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம் மூலம் அளிக்கப்பட்டது.    தற்போது இரண்டாம் கட்ட ஏலம் நடைபெற உள்ளது.

இதில் திருச்சி, புவனேஸ்வர், அமிர்தசரஸ், ராய்ப்பூர், இந்தூர் மற்றும்  வாரணாசி ஆகிய ஆறு விமானங் நிலையங்கள் ஏற்கனவே உள்ளன.   இந்த ஏலத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்த ஆறு விமான நிலையங்களுடன் குறைந்த வருமானம் ஈட்டும் 7 விமான நிலையங்களையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் திருச்சி விமான நிலையத்துடன் சேலம் விமான நிலையத்தையும் இணைத்து ஏலம் விடப்பட உள்ளது.  அதாவது திருச்சி விமான நிலையத்தை ஏலத்தில் எடுக்கும் அதே நிறுவனம் சேலம் விமான நிலையத்தையும் நிர்வகிக்க வேண்டும்.   இது போல் மற்ற விமான நிலையங்களையும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி புவனேஸ்வர் விமான நிலையத்துடன் ஜர்ஸுகுடா விமான நிலையத்தையும், குஷினகர் மற்றும் கயா விமான நிலையங்களை வாரணாசியுடனும், காங்க்ரா விமான நிலையம் அமிர்தசரஸுடனும், ஜல்கான் விமான நிலையம் ராய்ப்பூருடனும், ஜபல்பூர் விமான நிலையம் இந்தூருடனும் வளர்ச்சிப் பணிகளுக்காக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி, “இந்த விமான நிலையங்கள் மொத்த முனையப் பகுதி, வருவாயின் வளர்ச்சி விகிதம், ஆக்கிரமிப்பு வீதம், மொத்த இயக்க செலவுகள், பயணிகளின் இயக்கச் செலவுகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் தனியார் பங்களிப்புடன் செயல்படும், அரசு, தனியார் பங்களிப்பு முறையில் விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி விமானப் போக்குவரத்து இயக்கம், பயணிகளின் எண்ணிக்கை, கையாளப்படும் சரக்கு அளவுகள், எதிர்கால மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டங்கள்,  பொருளாதார கவர்ச்சி, விமான நிலையம் அமைந்துள்ள நகரின் மக்கள் தொகை, மாநில உள்நாட்டு உற்பத்தி போன்ற அடிப்படை அம்சங்களும் அடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.