சென்னை

மிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்குத் தொடர்ந்து அனல் காற்று வீசும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாகி வருகிறது.  பகல் நேர வெப்பம் அதிகரிப்பால் மக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர்.   மக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவே அஞ்சும் நிலை உள்ளது.   ஆயினும் தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் பகல் வேளைகளில் மும்முரமாக நடந்து வருகிறது.

இன்று தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், ” சில தினங்களாக மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளிலிருந்து தரைக்காற்று தமிழகத்தை நோக்கி வீசிவருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசும்

அதிலும் குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகள் என 26 மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 4 முதல் 6 டிகிரி வரை அதிகமாக இருக்கும்.

 ஒரு சில பகுதிகளில் அதிகப்படியான அனல் காற்று வீசக்கூடும் என்பதால் பொது மக்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்