விருதுநகர்
இன்று முதல் 4 நாட்களுக்கு மகாளய அமாவாசைக்காகப் பக்தர்கள் சதுரகிரி கோவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். அகஸ்தியர் உட்பட 18 சித்தர்கள் இங்கு வாழ்ந்து வழிபட்டதாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது. இக்கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 14 ஆம்தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வரும் 15 ஆம் தேதி வரை சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலையில் ஏற காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்லவோ மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கவோ கூடாது. அங்கு இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.
இவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது. இம்முறை மகாளய அமாவாசைக்கு சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகமும், வனத் துறையினரும் அடிப்படை வசதிகளைச் செய்து வருகின்றனர். மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கூடுதலாக சதுரகிரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.