சென்னை

மிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யலாம் எனச் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா. புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

நாளை 19 ஆம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

வரும் 20-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

வரும்  21-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.