டில்லி
டில்லி நகரில் நடக்கும் கொரோனா பரிசோதனைகளில் மூன்றில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி ஆகி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 3.33 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் டில்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. நேற்று மட்டும் இங்கு 2224 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது நேற்றைய அளவில் இந்தியாவின் மொத்த பாதிப்பில் 5 இல் ஒரு பங்கு ஆகும். இங்கு மொத்தம் 41,182 பேர் பாதிக்கப்பட்டு 1327 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கடந்த 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் பரிசோதனை செய்யப்பட்டோரில் 37% பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது. அதாவது ஒவ்வொரு 3.13 பரிசோதனைக்கு ஒருவர் என கொரோனா உறுதி ஆகி உள்ளது. கடந்த மே மாத்ம் 14 முதல் ஜூன் 13 வரையிலான ஒரு மாத சராசரியில் 5.36 பரிசோதனைகளில் ஒருவருக்குப் பாதிப்பு உறுதி ஆகி இருந்தது.
டில்லியில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி வரை 8470 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி இருந்தது. அப்போது 1,19,736 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. அப்போதைய விகிதம் 14.1 சோதனையில் ஒருவருக்குப் பாதிப்பு உறுதி ஆகி இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் நடந்த சோதனைகளில் அது 5.36 சோதனைகளில் ஒருவருக்கு பாதிப்பு என உறுதி ஆகி உள்ளது.
கடந்த 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட மூன்று சோதனைகளில் ஒருவருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது. குறிப்பாக இந்த அதிகரிப்பு ஜூன் 11,12 மற்றும் 13 தேதிகளில் ஏற்பட்டுள்ளது. இது தேசிய சராசரியை விடப் பன்மடங்கு அதிகமாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே டில்லியில் இந்த நிலை உள்ளது.
வேலூர் சிஎம்சி கல்லூரி முன்னாள் முதல்வர் ஜெயப்பிரகாஷ், “டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது மிகவும் கவலையை அளிக்கிறது. ஜூன் மாத இறுதிக்குள் டில்லியில் 90,000 பாதிப்புக்கள் உண்டாகலாம். தற்போது மூன்று பரிசோதனைகளில் ஒருவருக்கு பாதிப்பு உள்ள நிலையில் விரைவில் அது இருவருக்கு ஒன்று என அதிகரிக்கக்கூடும்.
இதுவரை டில்லியில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் மூச்சுத் திணறல் அதிகம் உள்ளவர்களையும் பரிசோதனை செய்ய வேண்டும். இனி கொரோனா பரிசோதனைகள் ஐசிஎம்ஆர் பரிந்துரைகளை மிகவும் கடுமையாக்கப்பட்டு சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது டில்லியில் கொரோனா பரவி வரும் வேகத்தைப் பார்க்கும் போது இங்கு சமுதாய பரவல் தொடங்கி விட்டதை போல் உள்ளது. எனவே சிவப்பு மண்டலத்தில் உள்ள டில்லியில் பரிசோதனைகள் எண்ணிக்கையைப் பன்மடங்கு அதிகரிப்பது அவசியம் ஆகும். ஆனால் டில்லியில் உள்ள அனைத்து சோதனை நிலையங்களிலும் ஒரு நாளைக்கு முழு அளவில் சோதனைகள் நடத்தினாலும் 5776 சோதனைகள் மட்டுமே நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.