டெல்லி: ஸ்டாலின் தலைமையிலான  தமிழக அரசின் வற்புறுத்தலைத் தொடர்ந்து,  தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான கோவின் இணையதளத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள், இணையதளத்தில் பதிவு செய்ய மத்தியஅரசு கோவின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்களை அறிமுகப்படுத்தியது. தடுப்பூசி போடும் மையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், தடுப்பூசி இணையதளத்தில் பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் இந்த இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த  கோவின் இணையதளத்தில் இந்தி, ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று மேலும், புதிதாக ஒன்பது பிராந்திய மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால்,  ‘தமிழ்’ அதில் சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவின் இணையதளத்தில் தமிழ்  உடனடியாக சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசிடம் வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசின்  கோரிக்கையை மத்திய அரசின் சுகாதாரத்துறையினரிடம், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார். முன்னதாக, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தினை பதிவுச் செய்திருந்தார். இதற்கு பதில் தெரிவித்த மத்தியஅரசு, விரைவில் தமிழ் மொழி இணையதளத்தில் சேர்க்கப்படும் என கடந்த வாரம் கூறியது.

இந்த நிலையில், தற்போது  ‘கோவின்’ இணையதளத்தில் 12ஆவது மொழியாக ‘தமிழ்’ மொழி சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளோடு மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி ஆகிய பிராந்திய மொழிகளுடன் தமிழ் மொழி கடைசியாக சேர்க்கப்பட்டுள்ளது.