சென்னை: தீபாவளியையொட்டி, பட்டாசுகள் கொளுத்தியதால், ஏற்பட்ட குப்பைகள் நேற்று (31/10/24) முதல் இன்று  (01/11/2024) நண்பகல் வரை 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றபட்டதாக சென்னை  மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று (அக்.31) தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.  சென்னையில் 34 ஆயிரம் தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள  பட்டாசு குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் தீவிர பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி பல பகுதிகளில் , பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று முதலே ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவிலும் பல பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்றன.  சென்னையில் மட்டும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில்  5 ஆயிரம் பேர்   ஈடுபட்டு குப்பைகளை  வண்டியில் ஏற்றினர்.  பல தெருக்களில்  பட்டாசு குப்பைகள் மலை போல் தேங்கியதை ஊழியர்கள் அள்ள முடியாமல் திணறினார்கள்.

சென்னையில் வழக்கமாக 5500 மெட்ரிக் டன் குப்பைகள் வீடு களில் இருந்து சேகரிக்கப்படும். ஆனால் தீபாவளி பண்டிகையை  பட்டாசு வெடித்ததின் மூலம் கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கியது . மொத்தம் 15 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக குப்பைகள் குவிந்ததாக கூறப்படுகிறது அவ்வாறு குவிந்த பட்டாசு குப்பைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கொடுங்கையூர், பெருங்குடி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘சென்னையில் தீபாவளி பண்டிகை தினமான அக்.31ம் தேதி மதியம் முதல் இன்று (நவ.1) மதியம் பகல் 12 மணி வரையில், 156.48 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதில் ஆபத்து மிகுந்த பட்டாசுக் குப்பைகளை, மாநகராட்சி பணியாளர்கள் பிரத்யேகமான பைகளில் சேகரித்தனர். அவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆபத்து மிகுந்த பட்டாசு குப்பைகளை அகற்றும் வசதிகளைக் கொண்ட கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.