சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவம் காய்ச்சலான, Influenza H3N2 வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி னாலே போதும், காய்ச்சல் பரவாது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நாடு முழுவதும், Influenza H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. இந்த H3N2 வைரசானது, பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான H1N1 வைரஸின் திரிபு என கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி ஏற்படுகிறது. அவர்களுடன் சேர்ந்துள்ளவர்களுக்கும் இந்த காய்ச்சல் உடனே பரவி வருகிறது.
இந்த நிலையில், இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5.23 கோடி செலவில் கட்டப்பட்ட பல்வேறு மருத்துவக் கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.6) நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ரூ.5.23 கோடி செலவில் 16 மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவரும் மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இவை திறந்து வைக்கப்படும்.
இந்தியா முழுவதும் எச்2என்2 இன்புளுயன்சா வைரஸ் பரவி வருகிறது. இது 4 நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஐசிஎம்ஆர் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 200 இடங்களில் நடைபெறவுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.