சென்னை
இனி அரசு மற்றும் தனியார் நிறுவன விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் தற்போது பலவித கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் தமிழக நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடப்பதில்லை. இதனால் அந்த கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொரோனா அச்சுறுத்தலால் சென்ற வருடம் மார்ச் முதல் கோவில்கள், பள்ளிகள், அரசு நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகளில் பங்கு பெற்று வந்த நாட்டுப்புற கலைஞர்கள் மிகவும் துயர் அடைந்துள்ளனர்.
எனவே நாட்டுப்புறக் கலைகளைக் காத்திடவும், அந்த கலைஞர்களின் வாழ்வை செம்மைப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அவற்றில் ஒன்றாகத் தமிழக அரசு விழாக்கள், தனியார் நிறுவன விழாக்கள், ஆலைகள், கல்வி நிறுவனங்கள், ஆலயங்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.