டெல்லி அருகே நொய்டா 93வது செக்டரில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் நேற்று வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டது.

சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய அபக்ஸ் (32 மாடிகள்) மற்றும் சியன் (29 மாடிகள்) ஆகிய இரண்டு அடுக்குமாடி கட்டிடத்திலும் சேர்த்து மொத்தம் 915 குடியிருப்புகளும் 21 கடைகளும் இருந்தன.

2011 ம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ம் தேதி இந்த கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த கட்டிடத்தை இடிக்க நொய்டா நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது, அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வெடிவைத்து நீர்வீழ்ச்சி போல் அதே இடத்தில் விழவைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக எடிபைஸ் இன்ஜினியரிங் மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜெட் டெமாலிசன் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக களமிறங்கின.

இந்த கட்டிடம் நேற்று மதியம், மொத்தம் 3700 கிலோ வெடிபொருட்கள் கொண்டு வெடிக்க செய்து 10 நொடியில் புழுதிபறக்க பாதாளத்தில் விழுந்தது.

இதனால் சுற்றுவட்டாரத்தில் பறந்த புழுதி அடங்கிய பின், இன்று அந்த இடத்தில் மேற்கொண்ட ஆய்வுக்குப் பின் நொய்டா நகர தலைமை செயல் அதிகாரி ரித்து மகேஸ்வரி தெரிவித்ததாவது :

நொய்டா இரட்டை கோபுரம் இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த ஏ.டி.எஸ். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும், வேறு எந்த பெரிய அசம்பாவிதமும் நிகழவில்லை என்று கூறினார்.

மேலும், இந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் இடிக்கப்பட்டதால் 80,000 டன் அளவுக்கு கட்டிட கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதாகவும் கூறினார்.

இரும்பு, ஜல்லி, செங்கல் என இந்த கழிவுகள் அனைத்தும் படிப்படியாக இங்கிருந்து அகற்றப்படும் என்று கூறியவர் இதனை முழுவதுமாக அகற்ற மூன்று மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

கட்டிட கழிவுகளை கையாளும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் போது தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும் புகை போக்கிகள் பயன்படுத்தவும் தவிர அந்த பகுதியை தூய்மை செய்ய தானியங்கி கருவிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.