மதுரை: மதுரையில் வைகை ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சமீப காலமாக வைகை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நுரை உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களில் மலைப்பகுதிகளான வருசநாடு, வெள்ளிமழை, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைபகுதி களில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் வைகை அணைக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ரசாயன ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீரை, ஆலை நிர்வாகங்கள் ஆற்று நீரில் திறந்துவிடுவதால், வைகை ஆற்றில் ஓடும் நீர் வண்ண வண்ண கலர் மற்றும் அழுக்கு படிந்த நுரைகளுடன் பாய்ந்துகொண்டிருக்கிறது.
வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பல பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படுவதால், தற்போது ஏற்பட்டுள்ள ரசாயன நுரை காரணமாக, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
தற்போதைய நிலையில், வைகை அணைக்கு, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆயிரத்து 719 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் வைகை அணை இன்னும் இரண்டொரு நாட்களில் முழு கொள்ளளவான 71 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று வெள்ளம் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றுப்பாலங்களில் பொது மக்கள் யாரும் நிற்கக் கூடாது என அபாய ஓலி எழுப்பி, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.