தூத்துக்குடி
பறக்கும் படை அதிகாரிகள் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தி உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி தொகுதி முழுவதும் இக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியில் தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பிரசாரத்திற்குச் சென்றபோது, அவரது பிரசார வாகனம் மற்றும் கனிமொழியின் பைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கனிமொழி சோதனைக்கு முழுமையாக ஒத்துழைத்தார்.
கனிமொழியின் பிரசார வாகனத்தில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. என்பதால் தீவிர சோதனைக்குப் பிறகு அவர் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.