சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் டெல்டா மாவட்ட விவசாயி களுக்கு நிவாரணங்கள் அறிவித்துள்ளார். இதையடுத்து, மழை வெள்ளப்பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து ஆலோசிக்க வரும் 19ந்தேதி மஅமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தொடங்கியது முதல் சென்னை பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இடையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மழை  வெளுத்து வாங்கியது. இதனால் தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதந்து, பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் இயல்பான மழைப் பொழிவை விட கூடுதல் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சென்னையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ததுடன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு பயிர் சேதத்துக்கான வெள்ள நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு உள்ளது.  வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும். நடவு செய்து 15 நாட்களைத் தாண்டாத நிலையில் ஏற்பட்ட வெள்ளத் தாக்குதலில் அனைத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6083 மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படும், சாலைகள், பாலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க ரூ300 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள், வெள்ள நிவாரண நிதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வரும் 19-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும்  நிவாரண உதவி வழங்கலாமா என்பது குறித்து  ஆலோசிக்கக் கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.