சென்னை: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னையில்  எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். மேலும் தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால், 2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.   இதன் காரணமாக, சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மேலும்,சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன. பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலி இன்று 2வது நாளாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிளையும்செய்து, மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீட்பு படையினர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.அதே நேரத்தில்,நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினரும் பங்கேற்று மழை வெள்ள பாதிப்பு களை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பருவமழை குறித்து திமுக அரசு முன்னாலேயே திட்டமிட்டிருக்க வேண்டும்.  திட்டமிடாத காரணத்தினால்தான் சென்னையின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அரசின் மெத்தனம் காரணமாவே இன்று பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பருவமழையை எதிர்கொள்ள கடந்த அதிமுகஅரசு, முன்கூட்டியே ஒவ்வொரு மண்டலத்துக்கும்  அதிகாரிகளை நியமித்து, மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்கியது.

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள நீரை மோட்டர் மூலம் விரைந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதுடன், பல இடங்களில் மக்கள் பால், குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.