திருவண்ணாமலை: தமிழ்நாட்டின் சென்னை விழுப்புரம் கடலூர் என பல மாவட்டங்களை மழை வெள்ளத்தால் திணறடித்த பெஞ்சல் புயல் அருகே உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தையும் புரடிப்போட்டுள்ளது. அங்கு பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றின் தாக்கத்தால், பல இடங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வீடுகள் இடிந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மழை வெள்ளத்தில், மகாதீப திருவிழா நடைபெற்று வரும் அருணாச்சலேஸ்வரர் கோவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய செல்லும் வழியில் முழங்காலுக்கு மேல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் ஓயவில்லை. கடலோர மட்டும் வட மாவட்டங்களை பதம் பார்த்த இந்த புயல் தற்போது வட மாவட்டங்களில் தனது ஆட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது. திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்க விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோயில் நகரமான திருவண்ணாமலையில் பலத்த மழை காரணமாக, அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்பட பல பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அருகே உள்ள மலையில் இருந்து பாறை உருண்டு குடியிருப்புகளில் விழுந்துள்ளது. குறிப்பாக மலையடிவார பகுதியான வ.உ.சி., நகர், கருமாரியம்மன் நகரில் மண் சரிந்து பாறை உருண்டுள்ளது. இதில் அடிவார பகுதியில் உள்ள 2 வீடுகள் கடும் சேதம் அடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுவிட்டனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் அங்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார்.
திருவண்ணாமலையில் மகா தீப திருவிழா தொடங்கி உள்ள நிலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள மலையிலிருந்து வழிந்தோடும் தண்ணீரால், திருவண்ணா மலை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. . மகா தீபம் ஏற்றப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் கிரிவலப் பாதையை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மேலும் சுரங்கப் பாதைகள் மூழ்கின. ஆரணி அருகே சேவூர் பகுதியில் 4 மாடுகள் உயிரிழந்தன.
பே கோபுரம் தெரு, சின்னக்கடை தெரு, போளூர் சாலை, வேலூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. வேங்கிகால் ஏரியிலிருந்து வெள்ளநீர் வெளியேறியதால் ஆட்சியர் குடியிருப்பின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து வெள்ள நீர் சூழ்ந்தது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நொச்சிமலை பகுதியில் வெள்ள நீரால் வீடுகளில் சிக்கித் தவித்த 13 பேரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
மேலும் சம்பா அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களை மழை நீர் மூழ்கடித்துள்ளது. மழைநீர் வடியப் பல நாட்களாகும் என்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் பூக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் சந்தவாசல், படைவீடு மற்றும் சுற்றுப் பகுதியிலிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளதால் பள்ளி கல்லுரிகள் மூடப்பட்டு இருப்பதுடன், பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறிகள் போதியளவு கிடைக்கவில்லை. மழையால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகப் பால் வியாபாரிகள் கூறுகின்றனர்.
நகரப் பகுதியில் ஓரளவு மின்சாரம் இருந்தாலும், கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலின் தாக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.
இதற்கிடையில், பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 5:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மழை சற்று குறைந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின் மீது மண் சரிந்து காணப்பட்டது.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம், 14 கி.மீ துாரம் சுற்றளவு கொண்டது. இந்த மலையை ஆக்கிரமித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி, குடிசை, ஓடு கூரையால் ஆன வீடுகள் கட்டப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நிலையில் நிலச்சரவு காரணமாக, குடிசை வீட்டில் வசித்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் நிலச்சரிவில் சிக்கியதாகவும் தகவல் பரவியது.தகவலறிந்த தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட முயன்றனர். இருட்டாக இருந்ததால், மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. தற்போது, மண்ணுக்குள் புதைந்த வீட்டில், சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியை சுற்றியுள்ளவர்களை மீட்டு, தனியார் பள்ளியில் முகாம் அமைத்து, 15க்கும் மேற்பட்டோரை தங்க வைத்துள்ளனர்.