கோயமுத்தூர்:
கோவையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விரைவில் விமான சேவை ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
தமிழகத்தின் முதல் தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகம் கோயமுத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையம் அருகே 144 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஹாமில்டன் கிளப்பை புணரமைத்து காவல்துறை அருங்காட்சியம் அமைக்கப்பட்டு உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த அருங்காட்சியகத்தில் துப்பாக்கி, வாள், சீருடைகள் காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் டாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சிகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி நிகழ்ச்சியில் பேசியதாவது,
தமிழக காவல்துறையின் வீரத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, தமிழக கடலோர காவல்படையினர் பயன்படுத்திய படகு, விடுதலை புலிகளிடம் கைப்பற்றபட்ட நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்க்காகவும் காவலர் அருங்காட்சியகம் உதவும் என்று கூறினார்.
மேலும், கோவையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விரைவில் விமான சேவை ஏற்படுத்தப்படும் என்றும், அதற்காக எரிபொருள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கோவையில் இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரிபொருளுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் நெல்லை, மதுரை, கோவை மண்டலத்தில் 4 பாடப்பிரிவுகளில் தலா 240 சேர்க்கை வீதம் 720 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.