டில்லி
வீரமரணம் அடைந்த ராணுவத்தினர் உடலை விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் போது பயணிகள் 30 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்த விரைவில் கோரப்படும் என சொல்லப்படுகிறது..
சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடலை விமானத்தில் எடுத்துச் செல்லும் போது உடன் பயணம் செய்யும் மற்ற பயணிகள் 30 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்த கோரிக்கை விடப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இது ஒரு வரைவுத் திட்டமாக மட்டுமே உள்ளது எனவும் விரைவில் அமுல்படுத்தப் படலாம் எனவும் அறிவித்துள்ளது.
அதன்படி “நமது நாட்டின் தைரியம் மிக்க ஒரு ராணுவ வீரரின் உடல் தற்போது நமது விமானத்தில் எடுத்துச் செல்வதை தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய வீர செயலுக்காக பெருமிதம் கொள்கிறோம். பயணிகள் அனைவரும் அவரது ஆன்மா சாந்தியடைய 30 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என அறிவிக்கப்படும்.
ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் இது குறித்து, “இது போல வீரர்களின் உடல்கள் எடுத்துச் செல்லும் போது எந்த அறிவிப்பும் தற்போது வழங்கப்படுவதில்லை. உடலை விமானத்தில் ஏற்றும் போதும், பிறகு இறக்கப்படும் போதும் மரியாதை செலுத்தப் படுகிறது. தற்போது இன்னொரு முறை மரியாதை செலுத்துவது தேவையற்றது. மேலும் இந்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான போக்குவரத்தை இயக்குவதற்கு பதில் தேசபக்தியை இயக்கி வருகிறது” என தெரிவித்தனர்.