சென்னை

நேற்று பெய்த மழையால் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை சுமார் 3 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு, இடி மின்னலுடன், பரவலாக மழை பெய்ய தொடங்கியது.  நேற்றைய மழைக்கே விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

அப்போது கொச்சியில் இருந்து 157 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தது.  அந்த விமானத்தை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.

கோவாவில் இருந்து 140 பயணிகளுடன் சென்னைக்கு வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மதுரையில் இருந்து 70 பயணிகளுடன், சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திருச்சியில் இருந்து 64 பயணிகளுடன், சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், உள்ளிட்ட 6 விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.

மழை சிறிது நேரம் பெய்து ஓய்ந்த பின்பு இந்த விமானங்கள் கால தாமதமாக, ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. மேலும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ஹைதராபாத், மும்பை, டெல்லி, பெங்களூர், கவுகாத்தி, ராஞ்சி, திருச்சி, மற்றும் சர்வதேச விமானங்களான இலங்கை செல்லும் இரண்டு விமானங்கள், தமாம் செல்லும் விமானம் என மொத்தம் 12 விமானங்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

திடீரென பெய்த பரவலான மழைக்கே, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 18 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதோடு, ஒரு விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.  எனவே பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.