சென்னை:
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிந்து 22ந்தேதி காலை 8.30 மணிக்கு 29 பேருடன் அந்தமான் நோக்கி சென்ற விமானம் மாயமானது. இதன் காரணமாக விமானிகள் உள்பட 29 பேருடன் சென்ற அந்த விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 4 நாட்கள் ஆகியும் எந்தவிதமான தடயமும் கிடைக்கவில்லை.
விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து கடலோர காவல்படை ஐ.ஜி., ராஜன் பர்ஹோத்ரா இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
சென்னை முதல் அந்தமான் வரை விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. சென்னையிலிருந்து 150 கடல் மைல் தூரத்தில் தேடும் பணி நடந்து வருகிறது. தேடும் பணியை 300 கடல் மைல் தொலைவு தூரம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலில் எதுவும் கிடைக்காததால், தேடும் பணி விரிவு படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன விமானத்தை தேடும் பணி 4வது நாளாக நடந்து வருகிறது. விமானம் குறித்தோ, வீரர்கள் குறித்தோ எந்த தடயமும் கிடைக்கவில்லை.
விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை இணைந்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. விமானத்தை தேடும் பணிக்கு இஸ்ரோ உள்ளிட்ட அரசு அமைப்புகள் உதவி வருகின்றன. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பொருள் மீனவ படகின் உதிரி பாகம் என தெரியவந்துள்ளது. தேடுதல் பணிக்கு வானிலை சாதகமாக இல்லை.
விமானம் குறித்து அனைத்து சரக்கு கப்பல்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. கடலுக்கடியில் விமானத்தை தேடும் பணி நாளை துவங்கும். விமானத்தை தேடுவதற்கான சாதனங்கள் நம்மிடம் உள்ளன.
விமானத்தை தேடும் பணிக்கு ஆப்பரேஷன் தலாஷ் என பெயரிடப்பட்டுள்ளது என்றார்.