திருப்பதி: புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை கோலாகலமாக கொடியேறியது. புரட்டாசி திருமலை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. திருமலை திருப்பதியில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி. பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட ‘பெருந்தேவி’ என்றழைக்கப்பட்ட ‘சமவை’ என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார் .
இந்த 2023ம் ஆண்டுக்கான புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. பிரமோற்சவ தொடக்க நாளில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 22ஆம் தேதி கருட சேவை 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தங்க தேரோட்டம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. கருட சேவையின்போது, திருப்பதி ஏழுமலையான தரிசிக்க 5 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னதாககருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிறக்கொடியை நேற்று மாலை திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். உடன் சக்கரத்தாழ்வார், சேனாதிபதி, அனந்தன் ஆகிய உற்சவர்களும் எழுந்தருளினர். எடுத்து வரப்பட்ட மஞ்சள் நிற கொடி ஊர்வலம் கோவிலை அடைந்த நிலையில் வேத மந்திரங்கள் முழங்க தேவஸ்தான வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க தேவஸ்தான வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாலை மணி 6:15 க்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மஞ்சள் நிற கொடியை தங்க கொடிமரத்தில் கோவில் அர்ச்சகர்கள் ஏற்றி வைத்தனர். கொடியேற்றத்துடன் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது.
மனோ வேகம், வாயுவேகம் ஆகியவற்றை விட மிக அதிக வேகத்தில் பறந்து செல்லக்கூடியவர் கருடாழ்வார். பிரம்மோற்சவ துவக்க நாள் என்று கோவில் கொடிமரத்தில் கருடன் படத்துடன் கூடிய கொடியை ஏற்றி வைப்பதன் மூலம் கருடாழ்வார் பறந்து சென்று திருப்பதி மலையில் பிரம்மோற்சவம் துவங்கியிருப்பதை தேவர்களுக்கு தெரிவிப்பார் என்பது ஐதீகம். மேலும், இந்திராதி தேவர்கள், எட்டு திசை பாலகர்கள் ஆகியோருக்கு தெரிவித்து அவர்கள் அனைவரும் திருப்பதி மலையில் எழுந்தருளி அவரவர்களுக்கு உரிய பணியை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்வதாக கருதுவது ஐதீகம்.
எனவேதான் பிரம்மோற்சவ துவக்க நாளன்று கருடன் படத்துடன் கூடிய கொடி கோவில் கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது.